Tuesday 27 August 2013

8. அக்‌ஷரப் பிரம்ம யோகம்



அக்‌ஷரப் பிரம்ம யோகம்



அக்சரம் என்றால் அழியாதது! பிரம்மம் என்றால் பரம்பொருள். அழிவற்ற பரம்பொருள் பிரம்மம். உடலில் இருந்து ஆத்மா விடுபடும்போது, அந்தப் பரம்பொருளையே நினைத்திருந்தால், அந்த ஆத்மா பரம்பொருளையே அடையும். அதனால் எப்பொழுதும் பரம்பொருளை நினைத்தே தொழிலில் ஈடுபடுதல் சிறந்தது. இறுதியில் ஆத்மா செல்லும் வழி இரண்டு. இருள் வழி பிறப்பில் தள்ளும். ஒளி வழி பரம்பொருளில் சேர்க்கும். இக்கருத்துக்கள் இதில் விளக்கப்பெறுகின்றன.

இதில் 28 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

                         ------------

அர்ஜுனன்:  புருஷோத்தமா! பிரம்மம் என்பது எது?

கண்ணன்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அது எல்லாம் வல்லது! பழமைக்கும் பழமையானது! உலகனைத்தும் படைத்தது! அனைத்தையும் ஆள்வது! அணுவுக்குள் அணுவானது! நினைவிற்கு எட்டாதது! நெடிய உருவம் கொண்டது! ஆதவன் போல் பிரகாசிப்பது! அஞ்ஞான இருளை அகற்றுவது! அதுவே பிரம்மம்!

அர்ஜுனன்:  அப்படியென்றால் ஆத்மஞானம் என்பது என்ன?

கண்ணன்:  பிரம்மத்தின் இயல்பை அறிந்து கொள்வதே ஆத்ம  ஞானம்.   

அர்ஜுனன்:  கர்மம் என்பது என்ன?  

கண்ணன்: அசையும் பொருள் அசையாப் பொருள் என்று உயிர்களை உண்டாக்குவதற்காய்ச் செய்யப்படும் அர்ப்பண ரூபமான செயலே கர்மம் எனப்படும்.

அர்ஜுனன்: அதிபூதம் என்று எதைச் சொல்கிறார்கள்?

கண்ணன்: அழியும் தன்மை கொண்டதற்குப் பெயர் அதிபூதம்.

அர்ஜுனன்: அதி தைவம் என்று சொல்லப்படுவது எது?

கண்ணன்: உடலில் உறையும் புருஷனே அதிதைவம்.

அர்ஜுனன்: அதியக்ஞம் என்பது எது?

கண்ணன்: அந்த உடலில் இருக்கும் நானே அதியக்ஞம்.

அர்ஜுனன்: அது எவ்விதம் இந்த உடலில் அதியக்ஞம் ஆயிற்று? மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் அந்திமக் காலத்திலாவது பரம்பொருளை அடைவதற்கு வழி என்ன?

கண்ணன்: குந்தி மகனே! பிராணனைப் புருவங்களின் மத்தியில் நிறுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்தி, சிந்தனையைப் பரம்பொருள் மேல் நிலைநிறுத்துவதை அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்கிறவன் ஒளிப் பிழம்பான பரம்பொருளையே அடைகிறான். மரண காலத்திலாவது இப்பழக்கத்தை மேற்கொண்டாலும் அவன் பரம்பொருளையே அடைகிறான்! அதாவது அந்திமக் காலத்தில் என்னையே நினைத்தவனாய் உயிர் துறப்பவனும் நிச்சயம் என்னையே அடைகிறான். வேறு எதையாவது நினைத்துக் கொண்டே இறப்பவன், எதை நினைத்தானோ அதையே அடைகிறான்.

ஆகையால் அர்ஜுனா! நீ போரிடும் போதெல்லாம் என்னையே நினைத்துக் கொண்டு போரிடு! மனத்தையும் அறிவையும் எனக்கே அர்ப்பணித்து விட்டுப் போரிடு! நீ என்னையே அடைவாய்! இதில் சந்தேகமில்லை.           

பற்றற்ற துறவிகள் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு எதை  அடைகிறார்களோ, வேதவிற்பன்னர்கள் எதை அழிவற்றது என்று எண்ணுகிறார்களோ அதைப்பற்றி இப்போது சுருங்கச் சொல்லுகிறேன் கேள்!

உயிர் மூச்சை உச்சந்தலையில் வைத்து, ஒருமுகப்பட்ட மனதை இதயக்கமலத்தில் வைத்து என்னையே நினைத்து, ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை நாவிலே வைத்து உடலைத் துறப்பவன் உயர்கதி அடைகிறான். இத்தகைய யோகி எளிதில் என்னைக் கண்டு கொள்கிறான். அப்படி என்னைக் கண்டு கொண்ட மகாத்மா மறுபடியும் பிறப்பதில்லை. பிரம்மலோகம் வரையுள்ள அழியக் கூடிய எல்லா உலகங்களிலும் மறுபிறப்பு உண்டு. ஆனால் என்னை அடைந்தவர்களுக்கு மறுபிறப்பே கிடையாது.

பார்த்தா! பகல் இரவு இரண்டின் நிலை குறித்து இப்போது பகர்வேன்!

ஆயிரம் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். இன்னும் ஒரு ஆயிரம் யுகங்கள் ஓர் இரவு. பிரம்மாவுக்குப் பகல் வரும் போது உலகில் மறைந்திருக்கும் பொருள்களெல்லாம் காட்சிக்கு வருகின்றன. இரவு வரும் போது அவை பழைய உலகத்திலேயே மறைந்து விடுகின்றன. மறுபடியும் பகல் வரும்போது அப்பொருள்கள் மீண்டும் பிறக்கின்றனமறுபடியும் இரவு வரும்போது மீண்டும் மறைகின்றன. இயக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அழியாதது ஒன்று இருக்கிறது. அதை அடைந்து விட்டால் அங்கிருந்து திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது தான் என்னுடைய திருவடிகள். எங்கும் பரவி நிற்கும் பரம்பொருளான என்னிடம் எல்லாப் பொருள்களுமே அடங்கியுள்ளன. என்னையே நினைத்து என் திருவடிகளை அடைந்தவனுக்கு பிறகு என்றுமே பிறப்பு என்பது இல்லை.

பாரதச் செல்வா! எந்தக் காலத்தில் மரணமுற்றால் யோகிகளுக்கு மறுபிறவி இல்லையோ, எந்தக் காலத்தில் மரணமுற்றால் அவர்கள் மீண்டும் பிறப்பார்களோ, அந்தக் காலங்களைப் பற்றி இப்போது சொல்லுவேன்.

நெருப்பு, வெளிச்சம், பகல், வளர்பிறைக் காலம், உத்திராயணக் காலம் இவற்றில் இறக்கும் ஞானிகள் பிரம்மத்தை அடைந்து பிறப்பை அறுத்துவிடுகிறார்கள். புகை, இரவு, தேய்பிறைக் காலம், தச்சிணாயனக் காலம் இவற்றில் மரணமுறும் ஞானிகள், சந்திரனுடைய ஜோதியை அடைந்து மீண்டும் பிறக்கின்றனர். ஒளியும் இருளும் உலகில் என்றும் நிலையானவை. ஒளி வழியில் செல்பவன் திரும்புவதில்லை! இருள் வழியில் போனவன், போன வேகத்தில் திரும்பவும் பிறக்கிறான். இந்த இரு வழிகளையும் அறிந்து கொண்டவன் மயங்குவதில்லை. ஆகவே அர்ஜுனா! நீ எப்பொழுதும் யோகத்திலேயே நிலைத்திரு!                                                  


               (எட்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment