Tuesday 27 August 2013

6. தியான யோகம்



தியான யோகம்


ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் இன்பமுறுவதே தியானம். கர்ம யோகத்திலும் ஞான யோகத்திலும் சித்தி பெற்றவன் ஆத்ம ஞானம் பெறுகிறான். அப்படிப்பட்டவனுக்கு அனைத்தும் ஒன்றே என்ற சமநோக்கு தோன்றி விடும். உடல், உறவை நீக்கிவிட்டால், ஆத்மாவும் பரம்பொருளும் ஒன்றேயாகும். இக்கருத்துகள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 47 சுலோகங்கள் அடங்கியுள்ளன.


                         -------------

கண்ணன்: பாண்டு குமாரனே! இலாப நோக்கத்தைத் துறக்காதவன் துறவி ஆக மாட்டான். உணவுக்காக உலையில் நெருப்பைப் பற்ற வைக்காததாலும், உரிய காரியங்களைச் செய்யாமல் துறந்து விடுவதாலும் கூட ஒருவன் துறவியாகிவிட மாட்டான். பலாபலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், செய்யும் காரியத்தை ஒழுங்காய்ச் செய்பவனே உண்மைத் துறவி. புலன்கள் விசயத்திலும், கர்மங்களைச் செய்யும் விசயத்திலும் அவன் சகலத்தையும் துறந்துவிட வேண்டும். துறவு என்று சொல்லுகிறார்களே, அது தான் யோகம். தியான யோகத்தில் முன்னேற விரும்பும் முனிவனுக்கு அதற்குரிய வழி கர்மத்தில் இறங்குவது தான். இவ்விதம் தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்றிருப்பது சாத்தியாமாகிறது

ஆத்மாவை ஆத்மாவினால் தான் உயர்த்த வேண்டும். எக்காரணம் கொண்டும் அதைக் கீழ்நோக்கிச் செல்லவிடக் கூடாது. ஆத்மாவே ஆத்மாவுக்கு நண்பன்! ஆத்மாவே ஆத்மாவுக்குப் பகைவன். ஆத்மாவினால் ஆத்மாவை வசப்படுத்தியவனுக்கு ஆத்மா நண்பன்! ஆத்மாவை வசப்படுத்தியவனுக்கு ஆத்மாவே பகைவன்.

தன்னை வென்று மனம் தெளிந்தவனுக்கு, குளிர்ச்சியிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் பரமாத்ம தரிசனம் கிட்டும். அறிவு மற்றும் அனுபவத்தால் மனத்திருப்தி அடைந்தவனும் இன்ப துன்பங்களில் அசைந்து கொடுக்காதவனும், ஐம்புலன்களை வெற்றி கண்டவனும், மண்ணையும் பொன்னையும் ஒன்றாய்க் காணும் பண்பு கொண்டவனும் எவனோ அவன் துறவிகளில் எல்லாம் உயர்ந்த துறவியாவான். அன்பர்கள்.. அலட்சியப்படுத்துபவர்கள், நண்பர்கள்.. பகைவர்கள், நடுநிலையாளர்கள்.. வெறுத்து ஒதுக்குபவர்கள், சாதுக்கள்..பாவிகள், உற்றார்கள்..உறவினர்கள் அனைவரிடமும் சமமாய் நடந்து கொள்பவன் மிகவும் உயர்ந்தவன். உண்மையான துறவி ஆசையை அறுக்க வேண்டும்! சொத்து சுகங்களைத் துறக்க வேண்டும்! மனக் கிளர்ச்சியை ஒடுக்க வேண்டும்! ஏகாந்தத்தில் கிடக்க வேண்டும்! ஆத்மாவுக்கு யோக விருந்து படைக்க வேண்டும்! சுத்தமான ஓரிடம் பிடிக்க வேண்டும்! அது மிதமான உயரத்தில் இருக்க வேண்டும்! அதன் மேல் தர்பைப்புல் பரப்ப வேண்டும். பிறகு மான் தோலை விரிக்க வேண்டும்! அதன் மேல் வஸ்திரத்தைப் போட வேண்டும். அதில் அமர்ந்து உடல், தலை, கழுத்து, மூன்றையும் நேராகவும், அசையாமலும், நிலையாகவும் வைக்க வேண்டும். கண்கள் இப்படியும் அப்படியும் அசையாமல் இரண்டு புருவங்களுக்கும் இடைப்பட்டு முக்கின் நுனியையே பார்க்க வேண்டும். பிரம்மச்சரியக் கட்டுப்பாட்டுடன் சலனமும் பயமும் நீங்கிய மனத்தை என் மேல் செலுத்த வேண்டும். பிறகு புலன்களை அடக்கி என்னையே குறிக்கோளாய்க் கொண்டு யோகம் பயில வேண்டும். இவ்விதம் யோகம் பயிலும் துறவி என்னிடம் உள்ள, சொர்க்க சுகத்துடன் கூடிய அமைதியை அடைகிறான்.        

வயிறு முட்டச் சாப்பிடுபவனுக்கும், பட்டினி கிடப்பவனுக்கும், அதிகமாய்த் தூங்குபவனுக்கும், விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும்  யோகம் கிட்டுவதில்லை. அளவான ஆகாரம், அளவான நடமாட்டம், அளவான தூக்கம், அளவான விழிப்பு, அளவான செயல், இவையும் ஒரு வகை யோகம் தான். இது நிச்சயம் துக்கத்தை நீக்கும். மனதைப் பிடித்து ஆத்மாவிற்குள் அடைத்து விட்டு, ஆசையைத் துடைத்து விட்டு, பொருள்களின் மேல் விருப்பத்தை நீக்கி விட்டவன் உன்னதமான யோகியாவான். அவன் காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட மூடியில்லாத விளக்கைப் போன்றவன். விளக்கில் எரியும் நெருப்பு ஆடாது அசையாது. யோகியின் மனமும் ஆடாது அசையாது. பரம்பொருள் மேல் நிலைத்து நிற்கும்.     

எந்த நிலையில் யோகப்பயிற்சியில் கட்டுண்ட மனம் அடைய வேண்டிய இடத்தை நாடுகிறதோ.. எந்த நிலையில் மனமானது ஆத்மாவைக் கண்டு ஆனந்திக்கிறதோ.. எந்த நிலையில் சுகம் என்பது உடலால் அனுபவிக்கப்பட முடியாமல் அறிவால் அனுபவிக்கப்படுகிறதோ.. எந்த நிலையில் இதற்கு மேல் இலாபமில்லை என்று கருதப்படுகிறதோ.. எந்த நிலையில் எந்தத் துக்கம் வந்தாலும் கலங்காத நிலை ஏற்படுகிறதோ.. அந்த நிலையே பிரம்மானந்த யோகம். இந்த யோகத்தை மனங்கலங்காமல் உறுதியாய்ப் பயில வேண்டும். மனக்கிளர்ச்சியால் தோன்றும் ஆசைகளைத் துறந்து, புலன்களின் கூட்டத்தை மனச்சங்கிலியால் கட்டிப் பிணைத்துத் துணிவுடனும் விவேகத்துடனும் மெள்ள மெள்ள அடக்க வேண்டும். மனம் வேறொன்றையும் நினைக்காத படி ஆத்மாவிலேயே நிலைக்கச் செய்ய வேண்டும். ஆடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கும் மனத்தைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்தி, ஆத்மாவுடன் அது கூடிக் கொண்டிருக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்விதம் ஈசுவர நிலையடைந்த யோகிக்குத் தான் உன்னதமான சுகம் கிடைக்கிறது. அவன் ஈசுவரனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு எல்லையற்ற சுகத்தைத் தொல்லையின்றி அனுபவிக்கிறான். அவன் சகல உயிர்களிலும், தன்னைக் காண்பான்! தனக்குள் சகல உயிர்களையும் காண்பான்! அனைத்திலுமே சமநோக்குக் காட்டுவான்

எங்கும் நிறைந்தவனாயும் எல்லாம் இருப்பவனாயும் என்னைக் காண்பவனுக்கு நான் காட்சியளிப்பேன். நானும் அவனைக் கண்டு கொள்வேன். உள்ளது ஒன்றே என்ற உணர்வுடன் எல்லா உயிர்களிலும் உள்ள என்னைத் தொழுகின்றவன் எந்த நிலையில் இருந்தாலும் அவன் என்னிடமே இருப்பான்.

அர்ஜுனன்:     கிருஷ்ணா! மனம் என்பது சஞ்சலம்மிக்கது! குழப்பம் விளைவிக்கத் தக்கது! அடங்காதது! எதற்கும் மடங்காதது. காற்றை அடக்க முடியாதது போல் அதையும் அடக்க முடியாதென்று நான் நினைக்கிறேன்! அதனால் நீ சொன்ன சமநிலை தேவைப்படும் தியான யோகம் செய்வதில், அந்த மனம் நிலையாய் நிற்காதென்றே நான் எண்ணுகிறேன்!

கண்ணன்: உண்மை தான் விஜயா! மனம் அடக்க முடியாதது தான்! அலைபாய்வது தான். ஆனால் வைராக்கியம் மிக்க பயிற்சியினால் அதை   இழுத்துக் கட்டிவிடலாம். மனதை அடக்க முடியாதவனுக்கு யோகம் கிட்டுவதில்லை! மனத்தை ஒழுங்குபடுத்தி முறையாய் முயல்பவனுக்கு யோகம் நிச்சயம் கிட்டுகிறது.

அர்ஜுனன்:     சரி கண்ணா! ஒருவன் அக்கறையுடன் யோகத்தில் இறங்கினான். ஆனால் அவனுக்கு முயற்சி போதவில்லை. யோகத்திலிருந்து அவன் மனம் நழுவிவிட்டதால் யோகத்தின் பலன் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் என்ன  கதி அடைவான்? சிதறுண்ட மேகம் போல் அவன் அழிந்து விடுவானா? இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டுகிறேன்! இந்தச் சந்தேகம் தீர்க்க உன்னையன்றி யாரால் முடியும்?

கண்ணன்: அர்ஜுனா! அப்படிப்பட்டவனுக்கு இந்த உலகத்திலும் சரி.. மேலுலகத்திலும் சரி அழிவே கிடையாது. நல்லதைச் செய்ய முயலும் எவனும் துர்கதி அடைவதில்லை. அப்பனே! அவ்விதம் யோகத்திலிருந்து நழுவியவன் புண்ணியவான்கள் அடையும் இன்பங்களை வேண்டிய மட்டும் அனுபவிப்பான்! பிறகு உத்தமச் செல்வர்களின் குலத்தில் மறுபடியும் பிறப்பான். அல்லது ஞானிகளான யோகிகள் குலத்தில் பிறப்பான். இந்தப் பிறவி கிடைத்தற்கரிய ஒன்றாகும். இந்தப் பிறவியில் முந்திய பிறவியில் இருந்த அதே அறிவைப் பெறுவான். யோக நிலை அடைவதற்கு மறுபடியும் முயற்சி செய்வான். பூர்வ ஜென்ம வாசனையால் அவனையறியாமலே யோகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவான். வெறும் யோக ஆராய்ச்சியில் ஈடுபட்டாலே போதும், ஒலி உலகத்தை அவன் கடந்து விடுவான். இடைவிடா முயற்சியில் ஈடுபடும் யோகியானவன், கடந்த பல பிறவிகளில் பக்குவப்பட்டிருப்பதால், யோக சித்தி பெற்று நல்ல கதி அடைகிறான்.
கடுத்தவ முனிவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. கனிந்த நல்ஞானிகளைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. கடமையில் சிறந்தவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் யோகி. ஆகவே அர்ஜுனா! நீயும் யோகியாய் ஆகுக! என்னைச் சரணடைந்து என்னையே தொழுகின்றவன் யோகிகளில் எல்லாம் உன்னதமானவன். இதுவே என் முடிந்த முடிவு.                                                       

(ஆறாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment