Tuesday 27 August 2013

2. ஸாங்கிய யோகம்



ஸாங்கிய யோகம்



ஸாங்கியம் என்பது ஆராய்ச்சியால் வரும் ஞானம். அழியக்கூடியது உடல், அழிவற்றது ஆத்மா. ஆகவே உடலைக் கொன்றாலும் ஆத்மாவை கொன்றதாகாது. கடமைகளைச் சரிவரச் செய்தால் ஆத்மஞானம் கிட்டும். அதனால் நற்கதியடையலாம். இக்கருத்துக்கள் இதில் விளக்கப் படுகின்றன.

இதில் 72 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

-------------

(மருகித் துயருற்ற அர்ஜுனனுக்கு மதுசூதனன் தேறுதல் வார்த்தைகள் கூறலானார்.)

கண்ணன்: அர்ஜுனா! உன் செயல் ஆரியனுக்கு அடாதது! சொர்க்கத்தைக் கொடாததுபுகழின்பால் படாதது! இந்த நெருக்கடி நிலையில் இத்தகைய மனச்சோர்வு உனக்கு எங்கிருந்து வந்தது? பேடியைப் போல் வாடி நில்லாதேபோரிடேன் எனும் வார்த்தையைச் சொல்லாதேஎழுந்திடு! எதிரிகள் மேல் பாணத்தைப் பொழிந்திடு!       

அர்ஜுனன்: மதுசூதனா! பூஜைக்குரிய பீஷ்மரையும் மகாத்மா துரோணரையும் பாணங்களால் எப்படி அடிப்பேன். இவர்களைக் கொன்றால், இவர்களின் இரத்தம் தோய்ந்த இன்பங்களைத் தான் நான் இம்மையில் அனுபவிக்க வேண்டும். அதைவிட நான் யாசகம் பண்ணலாம்... அதிலே கிடைக்கும் உணவை உண்ணலாம். வானகமும் இந்த வையகமும் ஒருங்கே கிடைத்தாலும், என் புலன்களில் அலைபாயும் இந்தத் துயரம் என்னை விட்டு நீங்காது. எவரைக் கொன்றபின் நான் உயிர் வாழ விரும்ப மாட்டேனோ... அந்த திருதராஷ்டிர மைந்தர்களல்லவா எதிரே நிற்கிறார்கள்! ஒன்று.. இவர்களை நாம் கொல்லப் போகிறோம்! அல்லது அவர்கள் நம்மை வெல்லப் போகிறார்கள். இவற்றில் எது மேலானது என்பது எனக்கு விளங்கவில்லை. கண்ணா! கார்ப்பண்யம் என்ற சிறுமையால் கலங்கி நிற்கும் நான் உன் சீடன். உன்னையே சரணடைந்தவன். அறம் எது என்பதை எனக்கு அறிவுறுத்துக! அலைபாயும் என் மனத்தை நிலை நிறுத்துக!

(இவ்விதம்போர் புரியேன்!” என்று சொன்ன அர்ஜுனனுக்கு புன்முறுவல் பூத்தவாறு கண்ணன் கூறுவார்.)

கண்ணன்: அர்ஜுனா! வீணாய் நீ துயரப் படுகிறாய்! பேச்சிலே அறிவாளி போல் உயரப் பறக்கிறாய்! இறந்தவர் அல்லது இருப்பவருக்காக அறிஞர்கள் துயரப்பட மாட்டார்கள். நானும் நீயும்... இந்த அரசர்களும் இதற்கு முன்பு இல்லாமல் இருந்ததில்லை! இனியும் நாம் இல்லாமலிருக்கப் போவதில்லை. உடலுக்கு இளமையும் மூப்பும் வருவது போல், ஆத்மாவுக்கு வேறு உடல் வருகிறது. கிழிந்த துணிகளைக் களைந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிவது போல், சிதைந்த உடம்பினை நீத்து விட்டு ஆத்மா புதிய உடம்பினுள் நுழைகிறது. எனவே இறப்பிற்காக உண்மையான வீரன் கலங்கமாட்டான். ஐம்புலன்களின் திருவிளையாடலில்.. குளிர் வெப்பம், இன்பம் துன்பம் ஆகியவை தோன்றுகின்றன. இவை வரும் போகும்.. நிலைத்து நிற்பதில்லை. இந்த இன்ப துன்பங்களை எவன் சமமாய்க் கருதுகிறானோ அந்த வீரனுக்கு மரணமே இல்லை!

இன்னும் சொல்வேன் குந்தியின் மைந்தா! இல்லாததற்கு இருப்புக் கிடையாது! இருப்பது இல்லாமல் போக முடியாது. உலகெல்லாம் ஊடாடி நிற்கும் ஆத்மா அழிவற்றது என்பதை அறிந்து கொள்! இதை அழிக்க எவராலும் முடியாது. ஆத்மாவால் தாங்கப்படும் ஸ்தூல வடிவங்களே அழியக் கூடியவை. இவன் கொல்வான்.. இவன் கொலையுண்டான் என்று எண்ணும் இருவருமே அறியாதவர்கள். ஆத்மா கொல்வதும் இல்லை, கொலையுண்பதும் இல்லை! அது பிறப்பதும் இல்லை! இறப்பதும் இல்லைஅது   இல்லாதிருந்து பிறப்பதும் இல்லை! அது தேய்வதும் இல்லை! வளர்வதும் இல்லை! உடல் கொல்லப்படும் போதும் ஆத்மா கொல்லப்படுவதில்லை. ஆயுதங்கள் அதை அறுக்காது! தீ அதை எரிக்காது! நீர் அதை நனைக்காது! காற்று அதை உலர்த்தாது! அது அறுக்க முடியாதது! எரிக்க முடியாதது! நனைக்க முடியாதது! உலர்த்த முடியாதது! அது நிரந்தரமானது! நிறைவானது! நிலையானது! உறுதியானது! முடிவற்றது! மாறுபடாதது! சிந்தனைக்கு எட்டாதது! பொறிகளுக்குத் தென்படாதது! இன்றும் என்றும் புதியது! ஆகவே அர்ஜுனா! இவ்வுண்மைகளை அறிந்து துயரத்தைக் கைவிடு!    
ஒரு வேளை, இந்த ஆத்மா பிறப்பும் இறப்பும் உடையது என்று நீ கருதினாலும் கூட, அதற்காக நீ வருந்துவதும் பொருந்தாது. பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் நிச்சயமாய் இருக்கும் போது, இதைப் பற்றி நீ வருந்தி என்ன பயன்? இதில் துன்பப்பட என்ன  இருக்கிறது? உயிர்களின் துவக்கமும் முடிவும் தெளிவற்ற நிலையில் இருக்க, இடைப்பட்ட காலம் தெளிவாய் இருக்கிறது. இந்த ஆத்மாவை ஒருவன் வியந்து பார்க்கிறான்! இன்னொருவன் வியந்து பேசுகிறான்! மற்றொருவன் வியந்து கேட்கிறான்! ஆனால் யாரும் இதனை முழுமையாய்  அறிந்ததில்லை

            சுயதர்மத்தை எடுத்துக் கொண்டாலும், நீ அஞ்சுவது பொருந்தாது. அறப்போரைக் காட்டிலும் அரசனுக்குச் சிறந்த சுய தர்மம் இல்லை. தற்செயலாய் மூண்டிருக்கும் இந்த யுத்தம், கதவு திறந்திருக்கும் சொர்க்கம்! நியாயமான யுத்தமே சத்ரியனுக்கும் பாக்கியம்! இதை நீ நழுவ விட்டால் புகழை இழப்பாய்! பாவத்தை அடைவாய்! பயத்தால் நீ பின் வாங்கினாய் என்று பலரும் உன்னை இழித்துப் பேசுவர்! பகைவர் உன் திறமையைப் பழித்துப் பேசுவர்! பெருமையாய்ப் பேசியவர்களே அதை அழித்துப் பேசுவர்! இது சிறப்பைக் காட்டிலும் இழிவானதல்லவா? இதைவிடத் துன்பம் வேறு உலகினில் உள்ளதா? போரில் நீ மடிந்தால் கிடைக்கப் போவது பொன்னுலகம்! வென்றால் கிடைக்கப் போவது மண்ணுலகம்! ஆகவே வெற்றி தோல்வியைச் சமமாய்க் கொள்! போருக்குத் துணிந்து நில்! இதனால் உனக்குப் பாவம் உண்டாகாது!                    

அர்ஜுனா! இது வரை உனக்கு ஆராய்ச்சி வழியில் அறிவுரை கூறினேன்! இனி யோக வழியில் விளக்கிச் சொல்லுவேன்! இந்த யோக புத்தி கர்ம பந்தங்களை நீக்கும்! குற்றம் வராது காக்கும்! இந்தக் கர்ம யோக முறை முழுமை பெறாவிட்டாலும், வீணாகிப் போகாது! இதன் சிறு பகுதியும் கூட சம்சார பயத்தைப் போக்கும்! இதில் உறுதி கொண்டவனுக்கு அறிவு ஒருமைப்பட்டு உயர்ந்து நிற்கும்! மற்றவர் புத்தியோ கிளை விட்டுப் பிரியும்! சொர்க்கப் பயன் கூறும் வேத வாக்கியங்களில் சிலர் பற்று வைக்கிறார்கள்! இவர்கள் இறுதிப் பயன் என்று சொர்க்கத்தைத் தேடுகிறவர்கள்! ஆசைப்பாட்டுப் பாடுகிறவர்கள்! செல்வத்தின் பின்னால் ஓடுகிறவர்கள்! அதிகாரத்தை நாடுகிறவர்கள்! பேச்சிலே பூப் போன்ற அடுக்குச் சொல் போடுகிறவர்கள்! இவர்களின் பேச்சில் உள்ளத்தைப் பறி கொடுப்பவர்களுக்கு அறிவு என்றுமே ஒரு நிலைப்படாது.

அர்ஜுனா! வேதங்கள் கூறும் முக்குணங்களை (சத்வம், ராஜசம், தாமசம்) நீ கடந்தவனாக வேண்டும்! இன்ப துன்ப இருமைகளற்று சமநிலை அடைந்தவனாக வேண்டும். ஆத்மாவை வசப்படுத்திச் சிறந்தவனாக வேண்டும்! அப்போது உனக்கு வேதங்கள் தேவையில்லை! பொங்கும் வெள்ள நீர் இருக்கும் போது, சின்னஞ்சிறு பள்ளநீர் எதற்கு?               

இன்னொன்றும் கூறுவேன் அர்ஜுனா! சும்மா இருப்பதில் சுகம் காண்பது மடமை! வினை செய்வதே உன் கடமை! விளையும் பலாபலன்கள் உன்னைச் சேர்ந்தவையல்ல! பயன் கருதிக் காரியம் செய்வது பாவமானது! பற்றைத் துறந்து பணி செய்வதே சாலச் சிறந்தது! அதிலும் திறமையுடன் செயல் புரிவதே யோகம் என்பது! இது கைவரப் பெற்றவன் நன்மை தீமைகளைத் துறந்தவனாகிறான்! பிறவித் தளைகளை மறந்தவனாகிறான்! மனிதரில் சிறந்தவனாகிறான்! அறிவின் துணை கொண்டு மோகம் என்ற குழப்பத்தை அகற்றும் போது, கேட்பது, கேட்கப் போவது இரண்டாலும் நீ பற்றினை விடுவாய்! அந்த அறிவை ஆத்மாவுடன் இணைக்கும் போது யோகத்தை அடைவாய்!   

அர்ஜுனன்:  கேசவா! சமாதியில் நிலைத்த புத்திமானுடைய இலக்கணம் என்ன?                                     

கண்ணன்: ஆசைகளைத் துறந்து, தன்னிலே தானாகி, தனக்குள்ளே மகிழ்ந்தவன் நிறைஞானி ஆவான், அவனே ஸ்திதப்பிரக்ஞன்!

அர்ஜுனன்:  அவன் எப்படி இருப்பான்?

கண்ணன்: அவன் இன்பத்தில் மகிழாமல் இருப்பான்! துன்பத்தில் துவளாமல் இருப்பான்! ஆமை தன் அவயங்களை வேண்டும் போது ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல், அவன் தன் ஐம்புலன்களையும் உணர்ச்சிகள் தாக்காமல் உள்ளிழுத்துக் கொள்வான்.

அர்ஜுனன்: அவன் எப்படிப் பேசுவான்?

கண்ணன்: அவன் நல்லவை நடந்தால் மகிழ்ந்துரைப்பதுமில்லை! அல்லவை நடந்தால் நொந்து கொள்வதுமில்லை.

அர்ஜுனன்: அவன் எப்படி நடந்து கொள்வான்?           

கண்ணன்: கொந்தளிக்கும் புலன்கள் தவமுனிவர் மனத்தையும் கொதிப்பேற்றுகின்றன. நிறை ஞானி அவற்றை அடக்கி, என்னைச் சரணடைகிறான். உணவை உண்ணாதவன் அதை ஒதுக்கி வைக்கிறான். ஆனால் அதன் சுவையை மறப்பதில்லைபரம்பொருளைக் கண்டு கொண்டதும், அந்தச் சுவை பற்றிய நினைவும் பறந்து விடுகிறது!                       

இன்னும் கேள் அர்ஜுனா! பொருள்களை நினைக்கும் போது மனிதனுக்குப் பற்று உண்டாகிறது! பற்று ஆசையாய்ப் பரிணமிக்கிறது! ஆசை கோபமாய் உருவெடுக்கிறது! கோபத்தால் மோகம் தோன்றுகிறது! மோகத்தால் நினைவு தடுமாறுகிறது! இத்தடுமாற்றத்தால் அறிவு கெடுகிறது! முடிவில் மனிதன் அழிந்தே போகிறான். ஆனால் புலன்களை வசப்படுத்தும் மனவேந்தன், ஆறுதலடைகிறான். அந்த ஆறுதலில் துன்பங்கள் பொசுங்கி விடுகின்றன. அதனால் அவன் அறிவு ஆத்மாவுடன் கலந்து விடுகிறது. அதே சமயம் மனம் அடங்காதவனுக்கு ஆத்ம சிந்தனை இருப்பதில்லை! ஆத்ம சிந்தனை இல்லாதவனுக்கு அமைதி இருப்பதில்லை! அமைதி இல்லாதவனுக்கு இன்பம் கிடைப்பதில்லை. அலைந்து திரியும் புலன்களை, விரைந்து பின் தொடரும் மனமானது, கப்பலைக் கவரும் காற்றைப் போல், அறிவை அலைக்கழிக்கிறது.

ஆகவே புலன்களை அடக்கியவன் அறிவே நிலையானது. மனிதன் தூங்கும் போது அவன் விழித்திருக்கிறான்! மனிதன் விழித்திருக்கும் நேரமே அவனுக்கு இரவு. ஆறுகளின் தண்ணீரை ஆர்ப்பாட்டமின்றி வாங்கிக் கொள்ளும் கடல் போல் ஆசைகள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அகங்கார மமகாரமின்றி நடமாடும் அவனுக்கே அமைதி சொந்தம்! ஆசையுள்ளவனுக்கு அமைதி வெகு தூரம்!          

            இதற்குப் பெயர் தான், அர்ஜுனா.. பிரம்ம நிலை! இதை அடைந்த பிறகு மயக்கம் என்பது இல்லை! இறுதிக் காலத்திலாவது இந்நிலை அடைந்தவனுக்குபிரம்ம நிர்வாணம் என்னும் தெய்வீக நிலை சித்தியாகும்.


(இரண்டாம் அத்தியாயம் நிறைவுபெற்றது)

No comments:

Post a Comment