Tuesday 27 August 2013

14. குணத்ரய விபாக யோகம்



குணத்ரய விபாக யோகம்



குணத்ரய என்பது குணங்கள்! விபாகம் என்பது பாகுபாடு! குணங்களின் பாகுபாடுகள் என்பது பொருள்.

சத்வகுணம், ரஜோ குணம், தமோகுணம் ஆகிய மூன்றின் தன்மைகளும் இதில் விளக்கப்படுகின்றன.                      

இதில் 27 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

---------------

கண்ணன்: தடந்தோள் தனஞ்சயா! ஞானங்களில் உன்னதமான மற்றொரு ஞானத்தைப் பற்றி இப்போது உனக்குச் சொல்வேன்! பல முனிவர்கள் இதைப் பின்பற்றி நற்கதி அடைந்துள்ளனர். இதைக் கடைப்பிடிப்பவர்கள் எனக்கே சமமானவர்கள் ஆகின்றனர். அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை! ஊழிக்காலத்தில் அழிவதும் இல்லை.

மகா இயற்கையே எனது கர்ப்பப்பை. அதில் நான் விதைகளை விதைக்கிறேன். அதிலிருந்து உயிர்களெல்லாம் உற்பத்தியாகின்றன. கர்ப்பத்தில் தோன்றும் அனைத்து வடிவங்களுக்கும் மகா இயற்கையே தாய்! நான்தான் விதையைத் தூவும் தந்தை. இந்த இயற்கையிலிருந்து தோன்றியவைதான் சத்துவம், ராஜசம், தாமசம், என்னும் மூன்று குணங்கள்! இந்த குணங்கள்தான் அழிவற்ற ஆத்மாவை அழியும் உடம்புடன் இறுகப் பிணைத்து விடுகின்றன. இதில் சத்துவகுணம் என்பது பரிசுத்தமானது! ஒளி மிகுந்தது! இடர்ப்பாடற்றது! இது ஆத்மாவுக்குச் சுகத்திலும் ஞானத்திலும் பற்றுதலை உண்டாக்கும். ரஜோகுணம் என்பது ஆசை வடிவானது! இது ஆத்மாவுக்குக் காரியங்களின் மேல் பற்றுதலை உண்டாக்கும். தமோகுணம் என்பது அறியாமையால் தோன்றுவது! எல்லா உயிர்களையும் மயங்கச் செய்வது. இது     அசட்டை, சோம்பல், உறக்கம் ஆகியவற்றுடன் ஆத்மாவைப் பிணைக்கும். சுருங்கச் சொன்னால், சத்துவகுணம் சுகத்தில் சேர்க்கும்! ரஜோகுணம் செயலைத் தூண்டும்! தமோகுணம் கவனமின்மையால் தள்ளும்.    

சில நேரங்களில், சத்வகுணம் ரஜசையும் தமசையும் அமுக்கி மேலோங்கி நிற்கும். சில சமயங்களில் ரஜோகுணம் சத்துவம், தமஸ் இரண்டையும் அமுக்கித் தலைதூக்கி நிற்கும். இன்னும் சில நேரங்களில் தமோகுணம், சத்துவம், ரஜஸ் இவற்றை அமுக்கி உச்சத்தில் நிற்கும். உடம்பின் ஒன்பது வாயில்களிலும் ஞான ஒளி வீசும்போது சத்துவகுணம் ஓங்கியுள்ளது என்பதை அறியலாம். பேராசை, பிறன் பொருள் விரும்பல், வினை விருப்பம், வினைப் பெருக்கம், துடிதுடிப்பு, பரபரப்பு இவை ரஜோகுணம் மேலெழும்போது உண்டாகின்றன. விவேகமின்மை, முயற்சியின்மை, அசட்டை, மதிமயக்கம் ஆகியவை தமோகுணம் மேலிடும்போது உண்டாகின்றன.        

சத்துவகுணம் ஓங்கி நிற்கும்போது உயிர்விடுபவன், உத்தம ஞானிகள் வாழும் உலகத்தை அடைகிறான்! ரஜோகுணம் ஓங்கி நிற்கும் போது இறப்பவன், தொழிற்பற்று கொண்டவர் குலத்தில் பிறக்கிறான். தமோகுணம் ஓங்கி நிற்கும் போது மரிப்பவன், மூடர்களிடையில் பிறக்கிறான்.

சாத்துவிகத்தின் பலன் நன்மை! இதிலிருந்து ஞானம் பிறக்கிறது. ராஜசின் பலன் துன்பம்! இதிலிருந்து பேராசை தோன்றுகிறது. தாமசின் பலன் மடமை! இதிலிருந்து சோம்பல், மயக்கம், அறியாமை உண்டாகிறது.

சத்வகுணத்தார் மேலெழுந்து சொர்க்கமடைகின்றனர்! ரஜோகுண மனிதர்கள் மீண்டும் மனிதர்களாகவே மண்ணில் பிறக்கிறார்கள்! தாமச மூடர்கள் பறவை மற்றும் பிற ஜந்துக்களாகப் பிறந்து தாழ்நிலையை அடைகிறார்கள். இம்மூன்று குணங்களையும் கடந்தவன் பிறப்பு, மூப்பு, துக்கம், இறப்பு இவற்றிலிருந்து விடுபட்டு மரணமிலாப் பெருவாழ்வு பெறுகிறான். அத்தனைச் செயல்களையும் குணங்களே இயக்குகின்றன என்பதையும்  அவற்றைத்  தவிர வேறொரு கர்த்தா இல்லை என்பதையும், குணங்கள் வேறு.. தான் வேறு என்பதையும் கண்டு கொண்டவன் என் சொரூபமாகவே மாறிவிடுகிறான்.

அர்ஜுனன்:     பிரபோ! ஒருவன் இந்த முக்குணங்களையும் கடந்துவிட்டான் என்பதற்கு அடையாளம் என்ன? அவன் எப்படி நடந்து கொள்வான்? அவன் எவ்விதம் இந்த முக்குணங்களையும் கடக்கிறான்?    

கண்ணன்: பாண்டவனே! முக்குணங்களைக் கடந்தவன் தெளிவு, செயல், மயக்கம், ஆகியவை தோன்றும்போது அவற்றை வெறுக்கவும் மாட்டான்! தோன்றாத போது தேடித் திரியவும் மாட்டான். எல்லாம் குணங்களின் இயக்கமே என்பதை உணர்ந்து எதிலும் அக்கறை இல்லாதவன் போல் காட்சியளிப்பான். குணங்களின் தாக்குதலுக்கு அசைந்து கொடுக்கமாட்டான். தன்னிலை தவறமாட்டான். இன்ப துன்பங்களைச் சமமாய்க் கருதுவான். இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் இன்முகத்துடன் ஏற்பான். மான அவமானங்களை நிகராய் நினைப்பான். நண்பன் பகைவன், பிடித்தவன் பிடிக்காதவன் இவர்களை இணையாய்க் காண்பான். பொன்னையும் மண்ணையும் ஒன்றுபோல் பார்ப்பான். தனக்கென வேண்டிய தொழில் எதும் செய்யான். இத்தகையவனே குணங்களைக் கடந்தவன் என்று கூறப்படுகிறான்.

அர்ஜுனா! ஒப்பற்ற சுகத்திற்கும் அழிவற்ற தர்மத்திற்கும் நானே இருப்பிடம். அப்படிப்பட்ட என்னைச் சலனமிலா பக்தி யோகத்தால் வழிபடுகிறவன், முக்குணங்களையும் கடந்து, பிரம்மம் ஆவதற்குத் தகுதியடைகிறான்.


(பதினான்காம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment